ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சட்டமாக இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, தமிழக அரசு, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு கடந்த 27ம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில், “இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கல்வி நிலையங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அல்லது அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் கிடையாது. அதனால் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டு தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலாளர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து கலந்து ஆலோசனை மேற்கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இல்லை’ என்றனர். இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அடுத்த 3 மாதங்களில் இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மேல்முறையீட்டு மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், அடுத்தாண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதுகுறித்த சட்ட வரையறை உடனடியாக உருவாக்கி இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்குவதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்த்து மனு அவசர வழக்காக அடுத்த ஓரிரு தினத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முன்னதாக மேற்கண்ட வழக்கு தொடர்பாக திமுக, பாமக, அதிமுக ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அல்லது அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் கிடையாது உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Related Stories: