கொரோனா பரிசோதனை முடிவு குறித்து தமிழக அரசு தரும் தகவல்களில் உண்மை இல்லை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

மதுரை: மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக, ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாமாக முன் வந்து பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘கொரோனா பரிசோதனை முடிவுகள் அவ்வப்போது வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘நீதிமன்ற ஊழியர் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதுவரை முடிவு வரவில்லை.எனவே, அவரது முடிவை வெப்சைட்டில் பார்க்கிறோம்’’ எனக்கூறி பரிசோதித்தனர். ஆனால், பரிசோதனை முடிவு வெப்சைட்டில் இல்லாததால் அதிருப்தியடைந்தனர்.பின்னர் நீதிபதிகள், ‘‘அரசுத் தரப்பு அறிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை.

தகவல்களிலும் உண்மை இல்லை. நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் தகவல்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது’’ என கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘‘பயன்படுத்திய முகக்கவசங்கள் முறையாக அழிக்கப்படுகிறதா? இதற்காக ஏதேனும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதா? கொரோனாவுக்கான நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா? செலவுகள் கண்காணிக்கப்படுகிறதா? இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது அதிக பணம் வசூலிக்கப்படுகிறதா? பரிசோதனை முடிவுகள் வெளிவர ஏன் தாமதமாகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 27க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: