ஊழியருக்கு கொரோனா உறுதி குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சீல்

குன்றத்தூர்: குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, அந்த அலுவலகத்தை பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். குன்றத்தூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நிலங்கள் மற்றும் திருமணங்கள் பதிவு செய்யப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் அதிக பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகமாக குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதனால் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்தவேளையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதித்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், சார்பதிவாளர் அலுவலகத்தை மூடாமல், வழக்கம்போல் நேற்றுதினம் பத்திரப்பதிவு நடந்தது. இதையறியாமல் ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய டோக்கன்கள் வாங்கியும், பணத்தை கட்டியும் இருந்தனர். இந்நிலையில், ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அறிந்தும், அலுவலகம் செயல்படுவதை அறிந்த பேரூராட்சி அதிகாரி வெங்கடேசன், நேற்று அங்கு சென்றார். அங்கு, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றி, கிருமி நாசினி தெளித்து, அலுவலகத்தை மூடி சீல் வைத்தார். மீண்டும் நாளை (இன்று) பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என கூறி பொதுமக்களை, ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பயம் ஏதும் இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சார்பதிவாளர் அலுவலகம் வழக்கம் போல் செயல்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 15,917 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 13,062 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரேநாளில் 8 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 272 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, படுக்கை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றனர்.

Related Stories: