மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மேல் அபாயமாக செல்லும் மின்வயர்கள்: பணம் கட்டிய பிறகும் பணிகளை தொடராத அதிகாரிகள்

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகள் மீது செல்லும் குறைந்த மின் அழுத்த மின்வயர்களை மாற்றி அமைக்க கோரி, ஒன்றிய நிர்வாகம் பணம் செலுத்திய பிறகும், பணிகள் மேற்கொள்வதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சி, ஆதிதிராவிடர் பகுதியில் 500க்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றன. இங்குள்ள வீடுகள் மீது, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த  அழுத்த மும்முனை மின்வயர்கள் செல்கின்றன. வீட்டின் மாடியில் இருந்து கைக்கு எட்டும் உயரத்தில், மிகவும் அபாயகரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் மின்வயர்கள் உள்ளன. இதனால், எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்படும் அச்சத்துடன் இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர்.

மேலும், இங்குள்ள குடிசை வீடுகள் மீது மின்வயர்கள் உரசியவாறு செல்வதால் மழை காலங்களிலும், பலத்த காற்று வீசும்போதும் மீன்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி  தீப்பொறி ஏற்படுகிறது. இதனால், தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. தினம் தினம் அச்சுறுத்திவரும் இந்த மின்வயர்கள் மாற்றி அமைக்க வேண்டும் என, பலமுறை செய்யூர் மின்வாரிய அலுவலகத்தில், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நடவடிக்கை இல்லை. பின்னர் ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் முறையிட்டனர். அதன்பிறகு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மதுராந்தகம் ஒன்றிய நிர்வாகத்துக்கு மின்வயர்களை மாற்றுவதற்கு தேவையான பணத்துக்கான காசோலையை வழங்க உத்தரவிட்டது. அதன்படி, ஊராட்சி நிர்வாகம் கடந்த மாதம், மின்வாரியம் பணிகள் மேற்கொள்வதற்கான தொகைக்கு காசோலை வழங்கியது.

தற்போது, மழைக்காலம் தொடங்கிவிட்டதால், தாழ்வாக செல்லும் மின் வயர்களால் விபரீதங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன் மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செய்யூர் மின் வாரிய அலுவலகத்தில், கைக்கு எட்டும் உயரத்தில், வீடுகள் மீது மின்வயர்கள் செல்கின்றன. அதனால், எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, மின்வயர்களை தெரு வழியாக மாற்றி தாருங்கள் என பலமுறை முறையிட்டோம். அதற்கு அதிகாரிகள், காசு கட்டாமல் ஒரு கல்லை கூட நகர்த்த முடியாது கூறினர்.

இதுபற்றி  மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டோம். அதன்பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி மூலம் மின்வாரிய அலுவலகத்துக்கு பணத்தை கட்டியது. ஒரு மாதத்திற்கும் மேலாகியும், மின்வயர்களை தெரு வழியாக மாற்றவில்லை. இதற்காக மின்கம்பங்கள் கொண்டு வந்து வைத்தனர். அதற்கான பணிகளையும் தொடராமல், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர் என்றனர். இதுதொடர்பாக, செய்யூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு வாரத்தில் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்வயர்களை மாற்றி, தெரு வழியாக அமைத்து தரவோம் என்றார்.

Related Stories: