×

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குளம், குட்டைகள் மாயம்: வருவாய் துறையினர் அலட்சியம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தற்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 10க்கும் மேற்பட்ட குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் ஸ்ரீபெரும்புதூரை சுற்றி ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி உள்ளனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிக்க, குடிநீர் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 10 குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளன. உதாரணமாக ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் பழைய இந்தியன் வங்கி பின்புறம் சுமார் 35 செண்ட் பரப்பளவில் வண்ணான் குட்டை உள்ளது. இந்த குட்டையை அதே பகுதியை சேர்ந்த சிலர் சிறுக, சிறுக ஆக்கிரமிப்பு செய்து 20க்கும் அதிகமான வீடுகள் கட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட  வருவாய் துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோல் வருவாய் துறையினரின் அலட்சிய போக்கால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் 10க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் மாயமாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : municipality ,Pond ,Revenue Department ,Sriperumbudur , Sriperumbudur Municipality, Pond, Ponds Magic, Revenue Department
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை