வீட்டு வாடகை விவகாரத்தில் ஒருவர் தற்கொலை சென்னை போலீஸ் கமிஷனர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: வீட்டு வாடகை விவகாரத்தில் ஒருவர் தற்கொலை செய்தது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் பகுதியில் உள்ள விநாயகபுரம் பால விநாயகர் கோயில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு மனைவி, மகளுடன் வசித்து வந்தவர் சீனிவாசன். வீட்டு வாடகை கொடுக்காத காரணத்தால் இவருக்கும் வீட்டு உரிமையாளர் ராஜேந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி புழல் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் பென்ஜாம் கடந்த 1ம் தேதி சீனிவாசன் வீட்டிற்கு சென்று விசாரித்து, மனைவி மற்றும் வீட்டின் அருகே உள்ளவர்கள் முன்பு தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீசார் சென்ற சிறிது நேரத்தில் மனமுடைந்த நிலையில் இருந்த சீனிவாசன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் எரிந்த நிலையில்  அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மறுநாள் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து, வாடகை தகராறில் தலையிட்டு சீனிவாசனின் தற்கொலைக்கு காரணமான ஆய்வாளர் பென்ஷாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், இந்த விவகாரத்தில் வீட்டு வாடகை தொடர்பாக சிவில் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஏன் தலையிட்டார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என 4 வாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: