×

நீலகிரியில் வெளுத்துக்கட்டுகிறது மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கயிறு கட்டி ஆதிவாசிகள் மீட்பு

கூடலூர்: கூடலூரில் வெளுத்துக்கட்டும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் தவித்த ஆதிவாசிகள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கிய கனமழை நேற்று காலை வரை தொடர்ந்து  பெய்தது. கூடலூரில் மட்டும் 210 மி.மீட்டர் மழை அளவு பதிவானது. தொடர்மழையால் இப்பகுதிகளில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூடலூரில் ஆற்றின் கரை உடைந்ததால் 20வது வார்டு ஆதிவாசி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 20 வீடுகளில் இருந்த ஆதிவாசிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி மக்களை மீட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள 35 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள அத்திப்பாளி அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘8ம் தேதி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புடனும், விழிப்புடன் இருக்க வேண்டும்’ என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். பவானி ஆற்றில் நீர் திறப்பு: கனமழை காரணமாக நேற்று ஒரேநாளில் பில்லூர் அணையின் நீர்மட்டம் 14 அடி உயர்ந்து 97 அடியை எட்டியது. அணையின் மொத்த உயரம் 100 அடி ஆகும். இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரிநீர் நேற்று காலை திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

* 50 கிராமங்கள் இருளில் மூழ்கின
தொடர் மழையால் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததில், பல கிராமங்கள் இருளில் மூழ்கின. முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் இரவிலேயே ஊட்டி நகரம் உட்பட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள கேத்தி, பாலாடா, சாம்ராஜ், மஞ்சூர், எமரால்டு, இத்தலார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

* குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் 2வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.


Tags : rivers ,Nilgiris ,Adivasis , Nilgiris, whitewashing rain, river, flood, rope tying, aboriginal rescue
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்