நிதி பற்றாக்குறையை போக்க புது திட்டம் பொதுத்துறை வங்கி பங்குகளை விற்க ரிசர்வ் வங்கி யோசனை: அரசுக்கு ரூ.43,000 கோடி கிடைக்கும்

சென்னை: பொதுத்துறையில் உள்ள வங்கிகளில் 6 வங்கியில் உள்ள அரசு பங்குகளை விற்க ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் குறைந்துள்ளது. எனவே, நிதியை திரட்ட அரசுகள் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றன. தற்சார்பு திட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவது, அரசு பங்குகளை விற்பது உள்ளிட்ட முடிவுகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்கிடையில், பொதுத்துறை வங்கியில் உள்ள அரசு பங்குகளை குறைக்க ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் கூறியதாவது:

பொதுத்துறை நிறுவனங்களை போல், வங்கிகளில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகள் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் உள்ளன. உடனடியாக தனியார் மயத்தை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டுவது குறித்து கவலை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, முதல்கட்டமாக பங்கு எண்ணிக்கையை 51 சதவீதமாக குறைக்கலாம் என தெரிவித்துள்ளது.

பங்கு விற்பனையை 12 முதல் 18 மாதங்களுக்குள் முடிக்கலாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் மேற்கண்ட வங்கிகளின் மூலம் ரூ.43,229 கோடியை மத்திய அரசு ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ரூ.25,000 கோடிக்கு மேல் திரட்ட இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில் உள்ள அரசு பங்குகளை 26 சதவீதமாக குறைக்கலாம். ஆனால், உடனடியாக இது சாத்தியமில்லை. நீண்ட காலம் ஆகும். எனவே, இதற்கான கால வரையறை செய்ய வேண்டும் என கூறியுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

* பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் வகையில், அரசு பங்குகள் எண்ணிக்கையை 26 சதவீதமாக குறைக்க யோசனை கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 51 சதவீதத்துக்கு மேல் உள்ள பங்குகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

* தனியார் வங்கிகள் சில திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பொதுத்துறை வங்கிளைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர்.

Related Stories: