×

மாவட்ட வாரியாக கொரோனா பாதித்த, குணமடைந்தோர் எத்தனை பேர்? புள்ளி விவரங்களை வெளியிட கோரி திமுக எம்எல்ஏ வழக்கு; அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று விவரங்களை மாவட்ட வாரியாக முழுமையான தகவல்களை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், மதுரை மாவட்டத்தில் ஜூலை மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, இதுநாள் வரை அங்கு தொற்றை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. ஒரு பகுதியில் முழு ஊரடங்கையும், மற்றொரு பகுதியில் எளிதான விதிமுறைகளுடனும் அமல்படுத்துவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டி செல்வதும், சரக்குகளை பதுக்குவதும், கொரோனா பரப்புவதற்கும் காரணமாகிவிடுகிறது. பலி எண்ணிக்கையை வைத்து தான் ஒரு நோயின் தீவிரத்தை கணிக்க முடியும் என்ற நிலையில், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு மறைத்துள்ளது. இது தொடர்பாக எதிர்ப்புகள் வந்த நிலையில் ஒரே நாளில் 460 பேர் பலி என்று அரசு அறிக்கை வெளியிட்டது.

கொரோனாவை குணப்படுத்த மருந்தோ, தடுப்பு மருந்தோ இல்லாத நிலையில் கொரோனா தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான், தனிமைப்படுத்தி கொள்வது, தனிமனித விலகல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது குறித்து மக்கள் விழிப்புணர்ச்சி அடைவார்கள். மாவட்ட வாரியாக தொற்று பாதித்தவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா தொற்று குறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தமிழக அரசு  வெளியிட்டு வருவதாகவும், மனுதாரர் தி.மு.க எம்.எல்.ஏ என்பதால் தமிழக அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு 3 வாரங்களில் இந்த வழக்கில் எழுத்துபூர்வமாக விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : district ,release ,MLA ,DMK , District-wise, how many people have been affected by corona and recovered? , Statistics, DMK MLA case seeking release, Government, iCourt
× RELATED திமுக என்பது கொள்கை கூடாரம் அதை...