சென்னை விமான நிலையத்தில் அலட்சியம் தெர்மல் கேமராவுக்கும் காய்ச்சல்? தகடுகள் விழுவது முதல் தொடர்ந்து மெத்தனம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு போதுமான அளவில் தெர்மல் ஸ்கிரீனிங் செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது. வெளிநாடு பயணிகளால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தும், பயணிகளை சோதனை செய்வதில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில் ஐசிஎம்ஆரின் வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா தெர்மல் ஸ்கிரீனிங் செய்வதில் அலட்சியம் காட்டப்படுகிறது.

நான்கு மணி நேரத்திற்கு முன்பு வர வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால், அங்கு சென்றால் கேட்டில் தவம் கிடக்க வேண்டியிருக்கிறது. யாரும் இருப்பதில்லை. ஏற்கனவே ஏர் இந்தியா விமான பயண நேரம் அடிக்கடி மாறும் குணமுடையது. அப்படி தான் தினமும் நடக்கிறது என்ற புகார்கள் வராத நாள் இல்லை. உதாரணமாக அமெரிக்கா செல்லும் பயணிகள் வந்துவிட்டால் அவர்கள் காத்திருந்தாலும் கேட்க நாதியில்லை. பரிதாபமாக அவர்கள் வெளியில் காத்திருக்க வேண்டியது தான். நான்கு மணிக்கு வந்த பயணிகள் ஒரு வழியாக 6 மணிக்கு தான் அனுமதிக்கப்படுகின்றனர். காரணம், அப்போது தான் சுகாதார ஊழியர்கள் வருகின்றனர்.

அவர்கள் சுகாதார விண்ணப்பத்தை வாங்கி பார்த்து விட்டு, கையடக்க தெர்மல் ஸ்கிரீனிங் கருவி மூலம் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்கின்றனர். அதை பெரும்பாலும் செக்யூரிட்டிகள் தான் செய்கின்றனர். அவர்கள் முந்தைய பயணிக்கு எடுத்த காய்ச்சல்  பாரன்ஹீட் அளவை மாற்றாமல் அப்படியே அடுத்த பயணிக்கு எடுப்பதும் நடப்பது அன்றாட வழக்கமாகி விட்டது. ஆரம்பத்தில் எல்லாம் கனஜோராக நடந்தது. அதாவது, ஆட்டோமேடிக் கேமரா சுழன்று கொண்டிருக்கும். ஒரே நேரத்தில் 3 பேர் கடந்து சென்றாலும், அவர்களின் காய்ச்சல் அளவை கண்டுபிடித்து விடும். அதிகமாக இருப்பின் உடனே தடுத்து நிறுத்தப்படுவர். ஆனால், அது வேலை செய்வதில்லையாம்.

செக்யூரிட்டி எடுக்கும் டெம்பரேச்சர் அளவை வைத்து சுகாதார ஊழியர்கள், பயணிகள் தரும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு, கையெழுத்து போட்டு தருகின்றனர். அதன் பின் ஒரு நகலை அவர்கள் வைத்து கொண்டு, இன்னொன்றை இமிகிரேஷன் பிரிவுக்கு தர சொல்கின்றனர். இப்படித்தான் தெர்மல் ஸ்கிரீனிங் சோதனை சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகள் புறப்பாடு பிரிவில் தினமும் நடப்பதாக சொல்லப்படுகிறது. இதை அதிகாரிகள் உடனே கவனிக்க வேண்டும். தானியங்கி தெர்மல் டெம்பரேச்சர் கேமராவையும் பழுது பார்த்து செயல்பட வைக்க வேண்டும் என்று பயணிகள் சொல்கின்றனர்.

* ஜனவரியில் போட்ட திட்டம் இன்னமும் தொடர்ந்து இழுபறி

சென்னை உட்பட முக்கிய நகரங்களில் தெர்மல் கேமரா வைக்கும் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. ஜனவரி மாதம் தான் அரசு பச்சைக்கொடி காட்டியது. அப்போது பல வகையில் ஆராய்ந்து எந்த வகை தெர்மல் கேமரா பொருத்துவது, செலவு மிச்சம் செய்யலாம் என்று யோசித்தனர் அதிகாரிகள். இதையடுத்து தான் ட்ரைபாட்டில் பொருத்தி வைக்கப்படும் தெர்மல் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் தெர்மல் கேமரா பொருத்தி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் சென்னையில் மே மாதம் தான் முடிவாகி, ஜூன் மாத வாக்கில் தான் செயல்பட துவங்கியது. சில நாட்கள் தான் செயல்பட்டது. அதன் பின் என்னவானது என்று தெரியவில்லை. இப்போது ஒரு ஊழியர் தான் தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்து பயணிகளை அனுமதிக்கிறார். அதன் பேரில் சுகாதார விண்ணப்பத்தில் சான்றளிக்கப்படுகிறது.

* சுவரிலும் பொருத்தும் தெர்மல் கேமராக்கள்

வெளிநாடுகளில் நம்மை விட பல மடங்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் பல வகையிலும் தெர்மல் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுவரில் பொருத்தி செயல்படும் தெர்மல் கேமரா விலை அதிகம் என்பதால் சாதாரண கருவி பொருத்த அதிகாரிகள் திட்டமிட்டனர். இது வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறி.

Related Stories: