×

சிவகங்கை மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் ஏடிஎம் மையங்கள்: வாடிக்கையாளர்கள் சிரமம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏடிஎம் மையங்கள் மூடி கிடப்பதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு நவ.8ல் புழக்கத்தில் இருந்த ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்து வங்கி ஏடிஎம் மையங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. ஏடிஎம் மையங்கள் மாதத்தில் பல நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளன. நகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் இதே நிலையே உள்ளது. மாத தொடக்கத்தில் தொடர்ந்தது 10 நாட்கள் கடுமையான நெருக்கடியை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கொடுத்து வருகின்றன.

அரசு ஊழியர்கள் கணக்கு வைத்துள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்கள் கடந்த சில நாட்களாக முற்றிலும் திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இதுபோல் பிற வங்கி ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லாதது, இயந்திரத்தில் ஏற்படும் சிறிய பிரச்னை கூட பல நாட்கள் சரி செய்யப்படாமல் உள்ளன. வேலை நாளான வெள்ளிக்கிழமைக்குப் பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயந்திரத்தில் பணம் வைக்காமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. இதனால் மீண்டும் திங்கள்கிழமை பகல் 12மணிக்கு மேல் தான் மீண்டும் ஏடிஎம் மைங்கள் இயங்குகின்றன. சனி, ஞாயிறன்று மையங்கள் பெயரளவிற்கு திறந்திருந்தாலும் பணம் இருப்பதில்லை.

ஏடிஎம் மையங்களில் குறைந்த அளவில் பணம் வைப்பதாக கூறப்படுகிறது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாத நிலையால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘எல்லாம் டிஜிட்டல் மையம், ஆன்லைன் மூலமே அனைத்தும் செய்யலாம் எனக்கூறிய நிலையில் ஏடிஎம் தொடர்ந்து செயல்படுவதே கேள்விக்குறியாகியுள்ளது. ஏடிஎம்களில் குறைந்த அளவில் பணம் வைக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பிரச்னை ஏற்பட்டு வருகிறது. ஏடிஎம்களை பராமரிக்க போதிய நடவடிக்கை இல்லை.

நூறு நாள் வேலை திட்டம், முதியோர் பென்சன் மற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அதிகப்படியானோர் கணக்கு வைத்திருக்கும் அரசு வங்கி ஏடிஎம்களில் தொடர்ந்து பணம் இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது. மாத தொடக்கத்தில் இதுபோல் பணம் இல்லாத நிலையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஏடிஎம்களை முன்புபோல் அனைத்து நாட்களிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : ATM Centers ,Sivagangai District , Sivagangai, ATM centers, customer difficulty
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து