×

மும்பையில் ஊரடங்கு விதிகளில் புதிய தளர்வுகள்..: எல்லா நாட்களிலும் கடைகள் இயங்கவும், மதுகக்கடைகள் திறக்கவும் அனுமதி

மும்பை: மும்பையில் கொரோனா ஊரடங்கு விதிகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலில் சீனா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா என ஒவ்வொரு நாடும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில் பாதிப்புகள் அதிகளவாகவே பதிவாகி வருகின்றன. குறிப்பாக தேசிய அளவில் மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களே அதிக பாதிப்புகளை சந்திக்கின்றன. இதற்கிடையில் அன்லாக் 3 நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்த நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மிஷன் பிகின் அகெயன் திட்டத்தின் கீழ் மும்பையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மும்பையில் அனைத்துவிதமான கடைகளை திறக்கவும், அரசு, தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படவும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டோ, டாக்சிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தளர்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் மார்க்கெட் பகுதிகளில் கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே திறக்க முடியும். இதேபோல மதுக்கடைகள் ஆன்லைன் மூலம் மட்டும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை மாநகராட்சி நேற்று கடைகளை திறக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. இதன்படி புதன்கிழமை முதல் மும்பையில் வாரத்தின் 7 நாட்களும் அனைத்து விதமான கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைக்க மாநகராட்சி அனுமதியளித்துள்ளது. இதேபோல் வணிக வளாகங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தியேட்டர்கள், உணவுகூட வளாகங்கள், உணவகங்களை திறக்க முடியாது.

உணவகங்கள் ஆன்லைன் மூலம் மட்டும் உணவுப்பொருட்களை வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் மும்பையில் மதுக்கடைகளில் மது விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆன்லைனிலும் அரசின் வழிகாட்டுதல்களின்படி மது விற்பனை தொடரலாம். மதுக்கடைகளில் சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். மீறினால் குறிப்பிட்ட கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் சுமார் நான்கரை மாதங்களாக மூடிக்கிடக்கும் நிலையில் மாநகராட்சியின் அனுமதி மதுப்பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : shops ,Mumbai ,liquor stores , Mumbai, Corona, curfew, relaxation, matukakkataikal
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!