தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசு நிர்ணயித்தபடி பெறப்படுகிறதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசு நிர்ணயித்தபடி பெறப்படுகிறதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 7ம் கட்டமாக ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அனுமதி  அளித்துள்ளது. ஆனால், தனியார் மருத்த்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், தமிழக அரசு தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று அதிகாரிகளால் ஆய்வுகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த சக்திருகமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை காரணமாக ஒருசிலர் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு மருத்துவமனைகள் ஒரே ஒரு சோதனைக்கு பல்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றன.

குறிப்பாக மதுரை புதூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் கட்டணம் வசூலித்து வருகிறது. இதேபோன்று பல்வேறு தனியார் மருத்துவமனைகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களை முறைப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவானது இன்று நீதிபதி சத்தியநாரயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்று வசூல் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய நீதிமன்றம், அரசு நிர்ணயித்த தொகை தான் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்த ஆவணங்களுடன் விரிவான பதிலறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: