மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுன்னம் ராஜய்யா கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

ஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுன்னம் ராஜய்யா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களும் வைரஸ் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முடக்கம் காரணமாக மக்களில் பணியாற்றி நிவாரணம் வழங்கியதால், அரசியல் கட்சியினரும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, எளிமைக்கு பெயர் பெற்ற சுன்னம் ராஜய்யா( 62) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்ராச்சலம் தொகுதியில் மூன்று முறை (1999, 2004 மற்றும் 2014) சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இவர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ராஜய்யாவின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,938 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: