தமிழகத்தில் கடுமையான முழு ஊரடங்கு தேவை இல்லை!: பொதுப்போக்குவரத்தை அனுமதிக்க தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை!!!

ஈரோடு:  மாநிலம் முழுவதும் கடுமையான முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும், பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்றும் இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ.,  தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் சி.என். ராஜா தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக கூறியுள்ளார்.

எனவே கடுமையான முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் பொதுப்போக்குவரத்தை அனுமதிப்பது, பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது குறித்து திட்டமிடலாம் என்றும் இந்திய மருத்துவர் சங்கம், தமிழக அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் குறிப்பிட்டிருப்பதாக சி.என். ராஜா கூறியுள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் குறைகிறது என்றாலும் தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 43 மருத்துவர்கள் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் அதிகாரபூர்வமற்றது என சி.என். ராஜா மறுத்துள்ளார்.

Related Stories: