இந்தியாவுடன் மோதிய சீனாவுக்கு அடிமேல் அடி.. Baidu, Weibo ஆகிய சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை : பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கம்!!

புதுடெல்லி: சீனாவிற்கு சொந்தமான பாய்டு (Baidu) மற்றும் வெய்போ (Weibo) ஆகிய செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதை அடுத்து, அவை இரண்டும் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. லடாக் விவகாரத்தை தொடர்ந்து டிக் டாக், யூசி பிரவுசர், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன.

ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என குறுக்கு வழியில் குளோனிங் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின. இதையடுத்து, டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்பட 47 சீன ஆப்களுக்கு மத்திய அரசு  தடை விதித்தது. இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட 47 செயலிகளின் பட்டியலில் சீனாவின் பிரபல செயலிகளான பாய்டு மற்றும் வெய்போவும் இடம்பெற்றுள்ளன.

தற்போது அவை இரண்டும் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பாய்டு மற்றும் வெய்போ செயலிகள் இரண்டும் சீனாவின் முக்கியமான இணையதளங்கள் ஆகும். இவற்றில் பாய்டு சீனாவின் முக்கியமான  தேடுபொறி இயந்திரம் ஆகும். உலகம் முழுவதும், தினந்தோறும் 174 மில்லியனுக்கும் அதிகமானோர் பாய்டு தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். சீனா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வெய்போ செயலியானது சீனாவின் முன்னணி சமூக இணையதளமாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதில் இந்தியா - சீனா இடையே நல்லுறவை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கணக்கு வைத்திருந்தார். தற்போது வரை மத்திய அரசு தடை விதித்துள்ள சீன ஆப்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: