நீண்ட நேரம் ஆன்லைனில் பப்ஜி விளையாடிய 12ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு!: ஆந்திராவில் சோகம்

ஹைதராபாத்: ஆந்திராவில் நீண்ட நேரம் பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டை விளையாடிய 12ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரகாசம் மாவட்டம் சைனத்தக்குறி கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவன் முரளி பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டை நீண்ட நேரமாக விளையாடியதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் செயல்படாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய மாணவனுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, தாயின் அருகே சென்ற மாணவன் திடீரென மயங்கி விழுந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக மாணவனை மீட்டு சீரளா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் மாணவன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரெட்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பலரது உயிர்களை பலிவாங்கும் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர் வேதனையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர். செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோர், அதில் உள்ள ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். கடந்த சில காலமாக பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பெரும்பாலான மாணவர்களை அடிமையாக்கி வைத்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் நீண்ட நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிய மாணவன் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: