×

தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, மொழிக் கற்றுக்கொள்வதை அல்ல :பாஜக தலைவர் எல்.முருகனுக்கு ஆர்.பி. உதயக்குமார் பதில்!!

சென்னை : தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, மொழிக் கற்றுக்கொள்வதை அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்கு ஆர்.பி. உதயக்குமார் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். கூடுதலாக ஒருமொழியை கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
முன்னதாக சென்னை திருவெற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட எண்ணூர் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த 500 பேருக்கு ராயல் என்பீல்டு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியவாசிய பொருட்களை வருவாய்த் துறை அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்,புதிய கல்வி கொள்கையை தொடர்பாக முதல்வர் நேற்றைய தினம் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தி, புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் கட்டாயப்படுத்தி, திணிக்க நினைப்பதை தான் எதிர்க்கிறோம்.

இரு மொழி கொள்கை என்பது 80 ஆண்டு கால தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் , புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா வழியில் முதல்வரும் சாமானிய, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர் நலன் காக்கும் வகையில் இரு மொழி கொள்கையை தமிழகத்தில் பின்பற்றப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் மண்டலத்தில் களப்பணியாளர்களுக்கு உணவு கொண்டு சென்ற வாகனம் பழுதடைந்த காரணத்தில், தவறுதலாக குப்பை வாகனத்தில் உணவு கொண்டு சென்றது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறையில் மக்கள் தளர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இ-பாஸ் நடைமுறை சில தளர்வுகள் செய்வது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.

Tags : Murugan Udayakumar ,Tamil Nadu ,BJP ,RP Udayakumar , Tamil, Language, Learning, R.P. Udayakumar, comment
× RELATED நச்னு நாலு கேள்வி: கவர்ச்சிகரமான...