கிருஷ்ணகிரி அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்படும்: சென்னை மண்டல தலைமை பொறியாளர் தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என சென்னை மண்டல தலைமை பொறியாளர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அணையின் மதகுகள் சீரமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த பணியினை சென்னை மண்டல தலைமை பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) அசோகன் நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் மதகுகளின் கீழ் பகுதிக்கு மோட்டார் படகில் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியமுத்தூர் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே, 1957ம் ஆண்டு இந்த கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டது.

52 அடி உயரமுள்ள இந்த அணையின் மூலம் 9012 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் அணையின் உபரி நீர் வெளியேறும் மதகு உடைந்ததால், மதகை மாற்றி அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 14ம் தேதி முடிவுற்றது. பின்னர், மீதமிருந்த 7 பிரதான மதகுகளையும் 20 கோடியே 43 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள், கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி தொடங்கியது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, துரிதமாக செயல்பட்டு 7 மாதங்களுக்குள் இப்பணி முடிக்கப்பெற்றதால், அணையில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, கண்காணிப்பு பொறியாளர் (பெண்ணையாறு வடிநிலம்) சுரேஷ், செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், அணை உதவி பொறியாளர் சையத்ஜாகீருதின், பிஆர்ஓ சேகர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: