செய்யாறில் கொரோனா சிறப்பு முகாம் பகுதிகளில் நோயாளிகள் பயன்படுத்திய கவச உறை, கையுறை வீச்சு

செய்யாறு: செய்யாறில் கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவ முகாம் வளாகப் பகுதியில் நோயாளிகள் பயன்படுத்திய கவச உறை உள்ளிட்ட பொருட்கள் கண்ட இடங்களில் வீசியுள்ளதால்  சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு கொரோனா வைரஸ் தொற்று பரவும் அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் ஆற்காடு சாலையில் உள்ள செய்யாறு அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் கடந்த 4 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் பி மற்றும் சி பிளாக்குகளில் கடந்த சில மாதங்களாக சுமார் 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்முகாமில் தற்போது பி பிளாக்கில் 200 பேரும், சி பிளாக்கில் 170 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக நோயாளிகள் பயன்படுத்தி வந்த முழு கவச உறை, கையுறை, மாஸ்க் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய உணவு பண்டங்கள் எடுத்துவர பயன்படுத்திய கவர்கள் அங்கங்கே தூக்கி வீசப்பட்டு உள்ளன. தற்போது ஆடி மாதம் என்பதால் பலத்த காற்று வீசக்கூடும். இதில் நோயாளிகள் பயன்படுத்திய கையுறை உள்ளிட்ட பொருட்கள் காற்றில் பறந்து சென்று பலபகுதிகள் விழுந்து அங்குள்ளவர்கள் ஆரோக்கித்தை இழக்க நேரிடும்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்று உடையவர்கள் பயன்படுத்திய பொருட்களை முறையாக சேகரித்து அப்புறப்படுத்த சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சிறப்பு மருத்துவமனை சுற்றி குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: