கோயில்களில் ஆடிப்பெருவிழா ரத்து: பொங்கல் வைப்பதற்கு தடையால் வெல்லம் விற்பனை 50 சதவீதம் சரிவு: வியாபாரிகள் வேதனை

சேலம்: ஆடிப்பெருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், கோயில்களில் பொங்கல் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்  வெல்லம் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில், வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் அளவுக்கு வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.  இங்கு உற்பத்தியாகும் வெல்லம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கொரோனா பாதிப்பால், மார்ச் மாதம் வெல்லம் உற்பத்தி மற்றும் விற்பனை சரிந்தது.

வழக்கமாக ஆடிப்பெருவிழாவின்போது சேலம் மாநகர் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயிலில், திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு படையலிடுவார்கள். இதன் காரணமாக, சேலம் செவ்வாய்பேட்டையில், விழாவிற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு வெல்லம் விற்பனை களைக்கட்டும். நடப்பாண்டு ஆடிப்பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெல்லம் விற்பனை சரிந்துள்ளது. இது குறித்து வெல்ல வியாபாரிகள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தினசரி 50 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, ஆடிப்பெருவிழா, ஓணம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விசேஷங்களில் வெல்லம் விற்பனை களைக்கட்டும். குறிப்பாக ஆடிப்பெருவிழாவில் சேலத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், கொழுக்கட்டை தயாரித்தல் உள்ளிட்டவை நடக்கும்.  இந்த காலக்கட்டத்தில் வழக்கத்தை விட, கூடுதலாக வெல்லம் விற்பனையாகும். நடப்பாண்டு ஆடிப்பெருவிழா ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க முடியாது. இதனால், கடந்தாண்டை காட்டிலும் 50 சதவீதம் வியாபாரம் சரிந்து விட்டது. கொரோனாவுக்கு முன்பு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் 1200க்கு விற்றது. தற்போது வெல்லம் வரத்து சரிவால் சிப்பத்திற்கு 150 அதிகரித்து 1,350 என விற்பனை செய்யப்படுகிறது.  இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: