அதிக சரக்குகளை நீண்ட தூரம் இழுத்துச் செல்லும் மின்சார சரக்கு ரயில் இன்ஜின்கள் ஈரோடு பணிமனையில் பராமரிப்பு: ரயில்வே வாரியம் அனுமதி

சேலம்: அதிக சரக்குகளை நீண்ட தூரத்திற்கு இழுத்துச் செல்லும் மின்சார சரக்கு ரயில் இன்ஜின்களை, ஈரோடு பணிமனையில் பராமரிக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோட்டில், ரயில் இன்ஜின் பராமரிப்பு பணிமனை இயங்கி வருகிறது. இங்கு பயணிகள் ரயில் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் டீசல் இன்ஜின்கள் மற்றும் மின்சார ரயில் இன்ஜின்கள் பராமரிக்கப்படுகின்றன. மின்சார சரக்கு ரயில் இன்ஜின்கள் பராமரிப்பு பணி, பிற மாநிலங்களில் உள்ள பணிமனைகளில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிகப்படியான சரக்குகளை நீண்ட தூரத்திற்கு இழுத்துச் செல்லும் மின்சார சரக்கு ரயில் இன்ஜின்களை பராமரிக்க ஈரோடு பணிமனைக்கு அனுமதி அளித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முதல்கட்டமாக தெலுங்கானா மாநிலம் காசிப்பேட் பணிமனையில் இருந்து டபிள்யூ.ஏ.ஜி.-9 ஹெச் வகையிலான 2 மின்சார சரக்கு ரயில் இன்ஜின்களும், சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்நகர் பணிமனையில் இருந்து  டபிள்யூ.ஏ.ஜி.-9 ஹெச் வகையிலான 2 மின்சார சரக்கு ரயில் இன்ஜின்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 4 இன்ஜின்களும் நீண்ட தூரத்திற்கு சரக்குகளை இழுத்து செல்பவையாகும். இதனை பராமரிக்கும் பொறுப்பு, ஈரோடு பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெற்கு ரயில்வேயில் அரக்கோணம், ஈரோடு, ராயபுரம் பணிமனைகளில் 528 ரயில் இன்ஜின்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த இன்ஜின்கள் பராமரிக்கப்படுகின்றன. தற்போது, மின்சார சரக்கு ரயில் இன்ஜின்கள் பராமரிப்பு பணியை ஈரோடு பணிமனை பெற்றுள்ளது. முதலில், 4 இன்ஜின்கள் பராமரிப்பை செய்யவுள்ளது. தொடர்ந்து, இதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இத்தகைய இன்ஜின்களை நீண்ட தூரத்தில் உள்ள பணிமனைகளில் தான் இதுநாள் வரையில் பராமரித்து வந்தனர். தற்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள பணிமனைகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வாரியம் முடிவு செய்து அறிவித்துள்ளது. இதன்மூலம் ஈரோடு பணிமனை முன்னேற்றம் கண்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: