விபத்து ஆவணங்களை வக்கீலிடம் நேரில் கொடுக்க மாற்றுத்திறனாளி வாலிபர் 165 கி.மீ சைக்கிள் பயணம்: தஞ்சையில் இருந்து மதுரைக்கு சென்றார்

தஞ்சை: விபத்தில் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி, விபத்து ஆவணங்களை வக்கீலிடம் நேரில் கொடுக்க தஞ்சையில் இருந்து 165 கிலோ மீட்டர் மதுரைக்கு சைக்கிளில் சென்றார். தஞ்சையை அடுத்த வல்லம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலித்தொழிலாளி. கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ராஜா, கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒரு காலை இழந்தார். மதுரை நீதிமன்றத்தில் விபத்து வழக்கு தொடர்பாக, அவரது நண்பர் மூலமாக மதுரையில் உள்ள வழக்கறிஞரை நேரில் சந்தித்து அவரிடம் விபத்து தொடர்பான ஆவணங்களை நேரில் கொடுக்க முடிவு செய்தார்.

இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் மாற்றுத்திறனாளி ராஜா, தனது ஒரு காலுடன் தஞ்சை பிள்ளையார்பட்டியில் இருந்து 165 கிலோ மீட்டர் மதுரைக்கு சைக்கிளில் நேற்று காலை புறப்பட்டு சென்றார். இது குறித்து ராஜா கூறுகையில், இந்த வழக்கு முடிந்ததும், இதில் கிடைக்கும் இழப்பீடு தொகையை விபத்தால் மாற்றுத்திறனாளியாக மாறியவர்களுக்கு சட்ட உதவி செய்ய ஒரு பங்கு கொடுப்பதாகவும், அதிக விபத்து நடக்கும் தமிழ் நாட்டில் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை மையம் தொடங்கி அதற்கு ஒரு பங்கு தொகையை பயன்படுத்த போவதாகவும் தெரிவித்தார்.

Related Stories: