×

நெல்லை - திருச்செந்தூர் பஸ்சில் அலைமோதும் அரசு ஊழியர்கள்: கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

நெல்லை:  நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பஸ்சில் கூட்டம் அலைமோதுகிறது. பெண் ஊழியர்கள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். கடந்த 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை, 6வது கட்ட கொரோனா ஊரடங்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீட்டிப்பின்போது வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டத்திற்குள் இயக்கப்பட்ட அரசு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. அரசு ஊழியர்களின் வசதிக்காக மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு ஊழியர்களுக்காக பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில் தென்காசி வழித்தடத்தில் குறைந்தளவு பஸ்கள் இயக்கப்படுவதால், சமூக இடைவெளியின்றி ஊழியர்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் திருச்செந்தூர் வழித்தடத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பஸ்சில் கூட்டம் அலைமோதுவதுடன் பெண் ஊழியர்கள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.  
எனவே நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruchendur ,Government ,Nellai , Nellai , Government employees,Thiruchendur
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்