ஆந்திராவில் மலைவாழ் பெண்ணிற்கு கணவன் கண் எதிரே பாலியல் வன்கொடுமை!: குற்றவாளியை கைது செய்ய கோரி காவல்நிலையம் முற்றுகை..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கணவரை தாக்கி விட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை கைது செய்ய கோரி மலைவாழ் மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாமின் நகர் தாண்டாவை சேர்ந்த மலைவாழ் மக்களான நாகேஷ் நாயக்கும், அவரது மனைவியும் குண்டுப்பாலம் அருகே காவலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். கடந்த வாரம் இவர்கள் இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த 3 பேர் நாகேஷ் நாயக்கின் கைகளை கட்டிவிட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் கணவரின் கண் எதிரிலேயே அவரது மனைவியை மர்மநபர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அந்த தம்பதி, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கணவன் கண் எதிரே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இல்லையெனில் உயரதிகாரிகளிடம் முறையிடப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, குறிப்பிட்ட தம்பதியிடம் தவறு செய்த அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதே வேளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணையும், கணவரையும் போலீசார் மருத்துவமனை கொண்டு சேர்த்தனர்.

Related Stories:

>