×

தேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்

பந்தலூர்:பந்தலூர் அருகே அத்திக்குன்னு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி கோரஞ்சால், காப்பிகாடு, அய்யன்கொல்லி, மழவன் சேரம்பாடி, சேலக்குன்னு, அத்திக்குன்னு, பிதர்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். குடியிருப்புகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் முகாமிடும் யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்துவது, விவசாய பயிர்களை சேதம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று அத்திக்குன்னு பகுதியில் தேயிலைத்தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டன. இதனால் பசுந்தேயிலை பறிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர். யானைக் கூட்டத்தால் பீதி அடைந்து தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாமல் வீடு திரும்பினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பந்தலூர் வனச்சரக வனகாப்பாளர் லூயிஸ் மற்றும் வனத்துறையினர் சென்று காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து விரட்டினர். பல மணி நேரத்திற்குப்பின் அருகில் உள்ள வனப்பகுதிக்கு காட்டு யானைகள் சென்றது.

Tags : Wild Elephant Camp , Tea plantation, wild elephants, workers
× RELATED குட்டியுட‌ன் காட்டு யானைகள் முகாம்:...