×

கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்கக்கடத்தல் வழக்கு!: சிவசங்கரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு..!!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பிரனாயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். தங்கக்கடத்தல் வழக்கை என்.ஐ.ஏ. மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கராணி என்று வர்ணிக்கப்படும் ஸ்வப்னா உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை  என்.ஐ.ஏ. வும், சுங்கத்துறை அதிகாரிகளும் ஏற்கனவே 3 முறை காவலில் எடுத்து விசாரித்தனர்.

தற்போது மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிவசங்கர் ஏற்கனவே அளித்த வாக்குமூலங்களில் முன்னுக்கு பின் முரண்பாடு உள்ளது என்பது குற்றச்சாட்டாகும். இதனிடையே ஸ்வப்னாவின் 32 பக்க வாக்குமூலத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஸ்வப்னா குறிப்பிட்ட முக்கிய அரசியல் புள்ளியிடம் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதனிடையே துணை தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி கடத்தப்பட்ட தங்கம் காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிக்க பயன்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தங்கத்தை சென்னை விமான நிலையம் வழியாக கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை மற்றும் திருச்சியில் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Customs ,Kerala ,Sivasankara , gold smuggling case , Kerala , Sivasankaran ,
× RELATED சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர்...