×

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது..தற்போது தான் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருச்சி: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,63,222 ஆகும். நேற்று மருத்துவமனைகளில் இருந்து 5800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,02,283 ஆகும். கொரோனாவால் நேற்று மட்டும் 109 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியில் முன்பு அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது.

காய்ச்சல் முகாம் நடத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வருகிறோம். திருச்சியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் 1302 படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50,000 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தற்போது தான் பொதுமக்கள் கவனமாகவும், அக்கறையுடனும் இருக்க வேண்டும். ஏனெனில் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவே கொரோனா படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல், முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுதல், கை கழுவுவது, முதியவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களை தனிமையில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகமாகி தற்போது குறைந்து வரும் நிலையில் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் போது நோயை கட்டுப்படுத்தலாம். என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags : Radhakrishnan ,Tamil Nadu , Tamil Nadu, Corona, Health Secretary Radhakrishnan
× RELATED மக்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு...