நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணைக்காக மும்பை வந்த பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு: மாநகராட்சியின் அதிரடியால் வெடித்தது சர்ச்சை

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணைக்காக மும்பை வந்த பாட்னா நகர போலீஸ் எஸ்பி வினய் திவாரியின் இடது கையில் ‘குவாரண்டைன்’ முத்திரைக் குத்தப்பட்டு அவர் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார். மும்பை மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதியன்று பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34), பாந்த்ராவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் நடிக்கவிருந்த 7 புதிய திரைப்படங்களின் வாய்ப்பு, பாலிவுட்டை சேர்ந்த சில பிரபலங்களின் நிர்பந்தங்கள் காரணமாக அவரிடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தற்கொலை தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தனது மகன் சுஷாந்துடன் நடிகை ரியா சக்கரபர்த்தி ஓராண்டுக்கும் மேல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், சுஷாந்திடம் இருந்து ரூ.15 கோடியை ரியா அபகரித்து விட்டதாகவும் கூறி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நடிகை ரியாவுக்கு எதிராக பாட்னா போலீசார் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பாட்னா போலீசை சேர்ந்த 4 பேர் குழு ஒன்று சமீபத்தில் மும்பைக்கு வந்தது. தங்களது விசாரணைக்கு மும்பை போலீசார் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று பீகார் போலீசார் கூறியிருந்தார். இந்த சூழலில், சு பீகார் போலீஸ் குழுவினருக்கு உதவி செய்வதற்காகவும் விசாரணையை மேற்பார்வையிடுவதற்காவும் பாட்னா நகர போலீஸ் கண்காணிப்பாளர் வினய் திவாரி நேற்று முன்தினம் மும்பை வந்தார். மும்பை வந்திறங்கியதும் பேட்டியளித்த அவர், ‘‘சுஷாந்த் தற்கொலை வழக்கில் தேவைப்பட்டால் மும்பை போலீசாரால் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட பாலிவுட் பிரபலங்களிடம் நாங்களும் மீண்டும் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்வோம்’’ என்றார்.

இதற்கிடையே, திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பாட்னா போலீஸ் கண்காணிப்பாளர் வினய் திவாரியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக தனிமைப்படுத்தியது. கொரோனா தொற்று காலத்தில் வெளிமாநிலத்தில் இருந்து விமானத்தில் வந்தவர் என்ற அடிப்படையில் வினய் திவாரியின் இடது கையில் ‘குவாரண்டைன்’ முத்திரை குத்தப்பட்டு அவர் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மும்பை போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். சுஷாந்த் தற்கொலை வழக்கில் வினய் திவாரி விசாரணை நடத்துவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படியே எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறி உள்ளது.

* நிதிஷ் குமார் கண்டனம்

ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘வினய் திவாரி விஷயத்தில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் முறையற்றது. இது குறித்து மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் பீகார் டி.ஜி.பி. குப்தேஷ்வர் பாண்டே ஏற்கனவே பேசியுள்ளார். பீகார் போலீசார் இந்த பிரச்னையை சட்ட ரீதியாக கையாளுவார்கள். அதற்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்’’ என்று பதிலளித்தார்.

Related Stories: