கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் போக்க கவுன்சலிங்: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவு

மதுரை: கொரோனா பாதித்தவர்களின் மன அழுத்தத்தை போக்க தன்னம்பிக்கை பயிற்சி அளிப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த பிரகாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களும், பாதிப்பு உறுதியானவர்களும் மிகுந்த மன அழுத்தத்தில் காணப்படுகின்றனர். பலர் இறந்து விடுவோம் என நம்புகின்றனர். பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் கொரோனா பாதித்ததாக நினைத்து தற்கொலைக்கு முயன்றார். எதிர்மறையான எண்ணங்களால் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுதொடர்பான செய்திகள் தினகரன் நாளிதழில் வந்துள்ளது. பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மன அழுத்தத்தை குறைத்திடத் தேவையான தன்னம்பிக்கை பயிற்சிகளோ, பேச்சோ, கவுன்சலிங்கோ இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு கொரோனா பாதிப்பு உள்ளவர்களை மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடத் தேவையான தன்னம்பிக்கை பேச்சுகள் மற்றும் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் பாலகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘மன அழுத்தத்தில் உள்ளவர்களை மீட்க தன்னம்பிக்கை பயிற்சியும், கவுன்சலிங்கும் அவசியம்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை முதன்மை செயலர்கள் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: