இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 26.77 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அறந்தாங்கி: இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் இதுவரை 26.77லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறந்தாங்கி, இலுப்பூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருவதுடன், தற்பொழுது  புதுக்கோட்டையில் புதிதாக 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவப்பிரிவும் கொரோனா சிகிச்சைக்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தேவையான அளவு படுக்கைகள், ஆக்ஸிஜன், உயிர்காக்கும் மருந்துகள், சத்தான உணவு போன்ற அனைத்து வசதிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இதுவரை அதிகபட்சமாக 26,77,017 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் சிறப்பான சிகிச்சையால் இதுவரை 1,96,483 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல், சளி, போன்ற அறிகுறி உள்ளவர்கள் ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைக்கு வந்து விட்டால் நுரையீரல் பாதிக்கப்படாமல் உடனடியாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். தாமதமாக  வரும் பொழுது நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு குணப்படுத்த கடினமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: