தென் மாவட்டங்களில் கொரோனா பரவல் எதிரொலி முதல்வர் நாளை முதல் 3 நாள் ஆய்வு: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதையொட்டி, தென் மாவட்டங்களில் முதல்வர் நாளை முதல் 3 நாட்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை 1.96 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு முதல் நேரில் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து வருகிற 5, 6, 7 (புதன், வியாழன் வெள்ளி) ஆகிய தேதிகளில் தென் தமிழகமான திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் நேரில் செல்ல உள்ளார். அப்போது, கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வுகளை நேரில் மேற்கொண்டு உரிய அறிவுரைகளை வழங்க உள்ளார். அந்த நேரங்களில் மாவட்டங்களில் இருக்கும் தொழில் முனைவோர்கள், விவசாயிகள், மகளிர் சுயநிதி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* இ-பாஸ் எளிதில் பெற நடவடிக்கை

அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது, இ-பாஸ் விண்ணப்பம் செய்திருந்தும், அது நிராகரிக்கப்பட்டால் கூட நியாயமான காரணம் இருந்தால் மாவட்ட நிர்வாக அதிகாரி அல்லது கிராம நிர்வாக அலுவலர்களை அணுகினால் அவர்களுக்கு உதவி செய்ய அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் முறைகேடாக இடைத்தரகர்கள் மூலம் வாங்கினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனாலும், இ-பாஸ் எளிதில் கிடைப்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Related Stories: