×

கொரோனா தொற்றால் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் தமிழக கவர்னரிடம் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் தொலைபேசியில் நலம் விசாரிப்பு: விரைவில் குணமடைய வாழ்த்து

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கவர்னர் மாளிகை வீட்டில் சிகிச்சை பெற்று வரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மக்களை மட்டுமல்லாமல் விவிஐபிக்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை 4 அமைச்சர்கள், 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், 3 எம்பி, ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், இன்ஜினியர்கள், வியாபாரிகள் என பாரபட்சமின்றி அனைவரையும் கொரோனா நோய் கிருமி தாக்கி வருகிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பணியாற்றி வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் உதவியாளர் உள்பட 87 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கவர்னருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 7 நாள் கவர்னர் மாளிகையிலேயே தனிமைபடுத்திக் கொள்வதாக கடந்த 29ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நேற்று முன்தினம் லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரது பாதுகாவலர்கள் அழைத்து வந்தனர். தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவார்.

அவரது உடல்நிலையை காவேரி மருத்துவமனை டாக்டர்கள் கண்காணித்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து நேற்று முன்தினம் முதல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் (81) வீட்டில் இருந்தபடியே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, அவரது உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வாழ்த்துவதாக கூறியதாக கவர்னர் மாளிகை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Governor ,Chief Minister ,home ,recovery ,Tamil Nadu , Corona, home treatment, President, Prime Minister, Chief Minister, telephone, health inquiry to the Governor of Tamil Nadu
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...