சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தது பழிவாங்கும் செயல்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தது பழிவாங்கும் செயல் என்று கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஜூலை 7ம் தேதி ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பாக போராட்டம் ஏன் நடத்தப்படுகிறது என்பதை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்பே சமூக நலத்துறை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, தீர்வு காணும் முயற்சிகளோ நடைபெறவில்லை.  

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைக் குறித்து சமூக நலத்துறை செயலாளர் சங்கத்தினரை அழைத்து பிரச்னையை பேசி தீர்க்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை விட ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. ஏற்கனவே சொற்ப ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது எந்த வகையிலும் நியாயமான செயலாக இருக்க முடியாது.

எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடிக்கும் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சமூக விலகலை கடைபிடித்து நடத்தப்படுகிற போராட்டங்களை ஒடுக்குகிற வகையில் காவல்துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: