சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் ஐஏஎஸ் மீது சொத்து குவிப்பு புகார்: விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

சென்னை: சுகாதாரத்துறை முன்னாள் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ், சொத்து குவித்துள்ளதாக எழுந்துள்ள புகார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ். கொரோனா காலத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து அவர் அதிரடியாக மாற்றப்பட்டு, வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான சொகுசு பங்களா கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், அவரது கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமாக ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி ஆகிய இடங்களில் பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அங்கு அடிக்கடி கணவன், மனைவி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், அவர் பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசிடமும் புகார் செய்யப்பட்டன. இந்த புகார் குறித்து மத்திய அரசும் விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து, தமிழக அரசும் பீலா ராஜேஷ் குறித்து விசாரணையை தொடங்கும் என்றும், விசாரணை அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீலா ராஜேஷ் எந்த துறைக்கு சென்றாலும் சர்ச்சைக்குரிய அதிகாரியாகவே உள்ளார். தற்போது சென்றுள்ள வணிக வரித்துறையிலும், இவருக்கும் இவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் பீலா ராஜேசுக்கு, இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: