ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கும் பன்நோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? உயர் நீதிமன்றம் சந்தேக கேள்வி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்நோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் வழங்க கோரி, தாய் அற்புதம்மாள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜிவ் கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருவதாகவும், ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க அதன் அறிக்கைக்காக ஆளுநர்  காத்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சூழலில் அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இதுபோன்ற சூழலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் சிறைத்துறை சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டது.இதை கேட்ட நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கு குறித்து விசாரிக்க கடந்த 1999ம் ஆண்டு அமைக்கப்பட்ட  பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், நீண்ட காலம் ஆகியும் இன்னும் அறிக்கை வரவில்லை. தற்போது அந்த விசாரணை முகமை செயல்பாட்டில்தான் உள்ளதா, தற்போதைய விசாரணை நிலவரம் என்ன என கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதாக சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: