129 ஆண்டுகளாக பராமரிக்காமல் உள்ள உத்திரமேரூர் ஏரியை தூர்வார வேண்டும்: காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடந்தது. மதிமுக பொது செயலாளர் வைகோ, துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வளையாபதி, செங்குட்டுவன், மாவை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், மணிவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் போல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய கட்சியினருக்கும், சிறப்பாக பணியாற்றிய அரசு துறையினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாநில அரசின் மெத்தன போக்கால் கொரோனா அதிகளவில் பரவி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியாமல் உள்ள அரசை கண்டித்தும், உயிர் பிரிந்த மருத்துவர் சுகுமார், பத்திரிகையாளர் ராமநாதன், காவல்துறை அதிகாரி பழனி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மசோதா வரைவுசட்டத்தையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் ஏரிகள் மாவட்டம் என பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் ஏரி 543 ஹெக்டேர் பரப்பளவும். 8 கிமீ நீளம் உள்ள கரைகளையும் கொண்டுள்ளது. இந்த ஏரி சுமார் 18 கிராமங்களில் உள்ள  சுமார் 6000 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதியளிக்கிறது. இதன் ஆழம் 20 அடி. ஆனால் தற்போதைய ஆழம் 10 அடியாக உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் 1891ம் ஆண்டு தூர் வாரப்பட்ட இந்த ஏரி, பின்னர் 129 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. உத்திரமேரூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: