×

தனியார் தொழிற்சாலையில் 20 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி: கம்பெனியை கிராம மக்கள் முற்றுகை

திருப்போரூர்: சிறுங்குன்றம் கிராமத்தில் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த கம்பெனியை மூட வலியுறுத்தி, கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை சிறுங்குன்றம் கிராமத்தில் மின்சாதன உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 240 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த வாரம் இங்கு பணியாற்றிய சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து 50 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுங்குன்றம் கிராம மக்கள், தனியார் தொழிற்சாலை வளாகத்தில் திரண்டனர். அங்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தொழிற்சாலை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மீதமுள்ள தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுவரை தொழிற்சாலையை மூட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐ கோதண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், கொரோனா பாதித்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஊரடங்கு நேரத்தில் தொழிற்சாலையை இயக்கியது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து, கம்பெனிக்கு சீல் வைக்க பரிந்துரை செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். திருப்போரூர் காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ, 4 சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் திருப்போரூர் காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைதொடர்ந்து, இங்கு பணிபுரியும் சிறப்பு எஸ்ஐ ஒருவருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல் இள்ளலூர் சாலையில் இயங்கும் தனியார் வங்கி மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டு, கடந்த வாரம் புதிய மேலாளர் ஒருவர் பணியில் சேர்ந்தார். பணியில் சேருவதற்கு முன்பு அவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருடன் கடந்த வாரம் முழுவதும் வங்கியில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செய்யூர்: செய்யூர் தாலுகா நல்லாமூர் கிராமத்தில் 12 பேர், நீர் பெயர் கிராமத்தில் 7 பேர், சித்தாமூர் பகுதியில் 21 பேர் என 40 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அணைக்கட்டு பகுதியில் 3 பெண்கள், 1 ஆண் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையொட்டி, பாதிப்பு எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. செய்யூர் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 331 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை 15,657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம்  முழுவதும் 12,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில்  4 பேர் இறந்தனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 262 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

* 10 ஆயிரத்தை கடந்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 213 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 10,038 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் காஞ்சிபுரம் நகராட்சியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து 150க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்படைந்துள்ளனர். இந்தவேளையில், கடந்த சில தினங்களாக 100க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 119 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 2133 பேர் கொரோனா பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் நகராட்சியில் 70, ஒன்றித்தில் 25, ஸ்ரீபெரும்புதூரில் 23, வாலாஜாபாத்தில் 10, குன்றத்தூர், மாங்காட்டில் தலா 14, உத்திரமேரூரில் 6, காரணித்தாங்கலில் 10, கோவூர், படப்பையில் தலா 5, அய்யப்பன்தாங்கலில் 4 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 213 பேருக்கு கொரோனா உறுதியானது. ஏற்கனவே மாவட்டத்தில் 9825 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தொற்று எண்ணிக்கை 10,038 ஆக உயர்ந்துள்ளது.

Tags : factory ,Corona ,Company , Private factory, 20 employees, Corona, company villagers, siege
× RELATED தெலங்கானாவில் வேதித் தொழிற்சாலையில்...