பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது மாஞ்சாநூல் கழுத்தறுத்து 2 காவலர்கள் படுகாயம்: நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

அண்ணாநகர்: பாடி மேம்பாலத்தின் மீது பைக்கில் சென்ற கணவன், மனைவியான 2 காவலர்களின் மீது மாஞ்சாநூல் விழுந்து கழுத்தை அறுத்ததால் படுகாயமடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி பறக்க விடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தற்போது, ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள பலர் தடையை மீறி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாஞ்சா நூலினால் காற்றாடி பறக்க விடுகின்றனர். அந்த மாஞ்சா நூல் சாலையின் குறுக்கே அறுந்து விழுந்து, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கழுத்தை அறுப்பதால் பலர் படுகாயமடைகின்றனர்.

இந்நிலையில், பைக்கில் சென்ற இரண்டு காவலர்கள் மீது மாஞ்சா நூல் விழுந்து கழுத்தறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜெயக்குமார் (42). இவர், வேப்பேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (38), மத்திய குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்  மாலை கொரட்டூரில் உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பாடி மேம்பாலம் மீது சென்றபோது, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல், ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி கழுத்தில் சிக்கி அறுத்தது. இதில் இருவரும் நிலைதடுமாறி பைக்குடன் கீழே சாய்ந்தனர். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டனர். தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் விரைந்து வந்து, இருவரையும் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாஞ்சா நூல், காற்றாடி தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது வில்லிவாக்கம் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ரிஜிஷ்பாபு நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். இதையடுத்து, அவரை நேற்று காலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

இதுகுறித்து கூடுதல் ஆணையர் அருண் கூறுகையில், ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாஞ்சா நூல், காற்றாடி பறக்க விடுபவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பவர்களை கைது செய்து, அவற்றை பறிமுதல் செய்து வருகிறோம். இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். பெயின்டர் தற்கொலை வழக்கில் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது, காற்றாடி விற்பனையை கண்டுகொள்ளாத வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: