குடியுரிமை திருத்த சட்ட விதிகள் 3 மாதம் கால அவகாசம் தேவை: மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிமுறைகளை இயற்றுவதற்காக கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவை என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த இந்து, சீக்கியர், ஜெயினர், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், பார்சி மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதற்கு கடும் கண்டனங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையே கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி மக்களவையிலும் 11ம் தேதி மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ஒப்புதல் அளித்தார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் இந்த சட்டத்திற்கான விதிமுறைகள் வடிவமைக்கப்பட வேண்டும் அல்லது கால அவகாசம் கேட்கப்படவேண்டும் என்பது கட்டாயமாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிமுறைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த மார்ச் தொடங்கி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசின் பல்வேறு பணிகளும் முடங்கின. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிமுறைகள் நிலை குறித்து சட்ட துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பியது. இதனை தொடர்ந்து சிஏஏ விதிகளை உருவாக்குவதற்கு கால அவகாசம் தேவை என்று மத்திய உள்துறை அமைச்சகமானது துணை சட்டத்திற்கான நிலைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உள்துறை அமைச்சகம் கோரியுள்ள 3மாத கால அவகாசத்தை நிலைக்குழு ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories: