தடுப்புப்பணி தொடர்பாக ஆய்வு சென்னையில் 7.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை: அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

சென்னை: சென்னையில் தற்போது வரை 7.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உணவு துறை அமைச்சர் காமராஜ், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த காலங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கூட்டு முயற்சியால் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, தற்போது சென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து ஏற்றத்தில் இருந்தது, தற்போது குறைந்து கொண்டே வருகிறது. 39 ஆயிரம் பேர் கள அளவில் பணியாற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் 7.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மைக்ரோ அளவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக தற்போது தொற்று தாக்கம் குறைய தொடங்கி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்றி நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்று பரவுவதற்கு 65 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை ஆகிறது என ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. சென்னை மற்ற நகரங்களுக்கு முன்னுதாரமாக உள்ளது. வளர்ந்த நாடுகளிலேயே படுக்கை வசதி அளிக்க திண்டாடி வரும் நிலையில் இங்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம்கள் தெருமுனைகளில் நடத்தப்படுகிறது. சென்னையில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் எளிமையாக வழங்குவது குறித்து முதல்வர் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார். சில தடைகள் தொடர்ந்தால் மட்டுமே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்றி நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories: