45 ஆண்டுக்கு பின் அமெரிக்கா மீண்டும் சாதனை நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்: மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது

கேப் கேனாவெரல்: சர்வதேச விண்வெளி மையத்தில் இரண்டு மாத ஆய்வுகளை முடித்து கொண்டு நாசா விண்வெளி வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தனர். அமெரிக்காவில் செயல்படும் ராக்கெட், ஏவுகணை, விண்கலம் தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, `என்டோவர்’ என பெயரிடப்பட்ட டிராகன் விண்கலத்தை தயாரித்தது. புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் டக் ஹர்லி, பாப் பென்கென் ஆகிய இருவரும் கடந்த மே 31ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கி ஆராய்ச்சிப் பணிகளை முடித்து விட்டு கடந்த சனிக்கிழமை டிராகன் மூலம் பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 21 மணி நேர பயணத்திற்கு பிறகு இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை மெக்சிகோ வளைகுடா கடல் பகுதியில் வெற்றிகரமாக இறங்கினர். மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பறக்க கூடிய 15 அடி உயரம் கொண்ட என்டோவர் விண்கலத்தின் வேகம் மீண்டும் வளிமண்டலத்தை வந்தடைந்ததும் 350 மைலாக குறைக்கப்பட்டு, பின்னர் 15 மைல் வேகத்திற்கு குறைந்து நிலைநிறுத்தப்பட்டது. இது கடலில் இறங்கும்போது அதனுடைய வெப்பநிலை 1,900 டிகிரி செல்சியசாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டோவர் இறங்கியதும் படகுகள் மூலம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்ட விண்வெளி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு குடும்பத்தினரை சந்திக்க சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக `ஸ்பிளாஷ்டவுன்’ என்று கூறப்படும் விண்கலம் தண்ணீரில் இறங்குவதை நாசா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் அடுத்த ஓரிரு மாதங்களில் இன்னும் சில வீரர்களை விண்வெளி மையத்துக்கு அனுப்ப உள்ளது. மேலும் அடுத்தாண்டு முதல் அங்கு செல்வதற்கு சுற்றுலா விமானங்களை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

>