×

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்: அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டத்துக்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கைக்கு தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், இதை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள், அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும், தமிழக அரசு இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், அமைச்சரவையை கூட்டி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் தமிழகத்தில் எதிர்கட்சியினர் மட்டுமல்ல, கல்வியாளர்கள், கல்வித் துறையை சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, பள்ளிக் கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டுக்கான பாடம் நடத்துவது, பள்ளிகளை நடத்துவது, பாடத்திட்டங்களை வடிவமைப்பது, மத்திய அரசு கொண்டு வருகிற புதிய கல்விக் கொள்கையை எப்படி தமிழகத்தில் செயல்படுத்துவது, அதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழுவை அரசு அமைத்தது.

அந்த குழுவினர் கடந்த 14ம் தேதி தமிழக அரசிடம் தனது பரிந்துரையை கொடுத்தது. அந்த பரிந்துரையில் புதிய கல்விக்கொள்கை மற்றும் தமிழகத்தில் பள்ளிகளை நடத்துவது தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, உயர்கல்வித் துறையில் உள்ள பிரச்னைகள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்கள், தேர்வு நடத்துவது, ஆன்லைனில் பாடம் நடத்துவது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது, ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்துவது ஆகியவற்றை ஆய்வு செய்ய அமைச்சர்கள் கொண்ட குழுவை உயர் கல்வித்துறை அமைத்திருந்தது.

அந்த குழுவும் தனது பரிந்துரையை அரசிடம் கொடுத்திருந்தது. மேற்கண்ட இரண்டு கல்வித்துறைகளின் பரிந்துரைகளையும் சேர்த்து புதிய கல்விக் கொள்கை மீதான விமர்சனங்களையும் உள்ளடக்கி, தமிழகத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், முதன்மை கல்வி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், வல்லுனர்கள், தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழினிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். 1965ம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர். பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று ‘தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது’ என்று தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாட திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவர் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, அதாவது, 13.11.1986 அன்று, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ‘இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சூளுரைத்தார்.

மேலும், இந்தியாவில் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர்.இப்படிப்பட்ட தலைவர்கள் வழி வந்த இந்த அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது.

மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 26.6.2019 அன்றே பிரதமரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், இந்த அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* கல்விக்கொள்கை ஆராய புதிய குழு அமைப்பு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நேற்று அமைச்சர்கள், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பிறகு முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்  என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்யவும், மூன்றாவது மொழியை கற்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆய்வு செய்யவும், மற்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள், உயர்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள், தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினர் சிலர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. குழு அமைப்பதற்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் மேற்கொள்கிறார்.

Tags : meeting ,Edappadi Palanisamy ,Central Government ,ministers ,announcement , Federal Government, New Education Policy, Opposition, Trilingual Policy, We Will Not Accept, Ministers, Officials, Chief Minister Edappadi Palanisamy, Announcement
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...