மயிலாடும்பாறை மூல வைகையாற்றில் கிடப்பில் போடப்பட்ட கரைகள் பலப்படுத்தும் பணி

வருசநாடு: மயிலாடும்பாறை மூல வைகையாற்றில் கிடப்பில் போடப்பட்ட கரைகள் பலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றுப்பகுதியில் ரூ.1 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு சேதம் அடைந்தது. பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணையில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டது. மூல வைகையாற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் ஒரு சில இடங்களில் கரைகள் சேதம் அடையும் அபாயம் உள்ளது.

எனவே பாதிப்பு ஏற்படும் பகுதியில் கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தடுப்பணையை சுற்றி குறிப்பிட்ட இடங்களில் கரைகளை பலப்படுத்தும் பணி பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்றது. ஆனால் இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மயிலாடும்பாறை விவசாயிகள் கூறுகையில், ‘மூல வைகை ஆற்றுப்பகுதியில் தண்ணீர் அதிகளவில் வரக்கூடிய இடங்களில் கரைகளை பலப்படுத்தி கூடுதல் தடுப்பணையை கட்ட வேண்டும். இல்லையெனில் காட்டாற்று வெள்ளத்தில் தடுப்பணை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும். பாதியில் நிற்கும் கரைகள் பலப்படுத்துதல் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: