வாக்குறுதியை நிறைவேற்றியது சிவசேனா...! ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது

மும்பை: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தின் போது ரூ.1 கோடி நன்கொடை அளிப்போம் எனும் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். பணம் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அயோத்தியில் நாளை மறுநாள் (5-ம் தேதி) ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கடந்த மார்ச் மாதம் அயோத்திக்கு வந்திருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கும்போது சிவசேனா கட்சி சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மகந்த் நிர்த்தயா கோபால் தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “சிவேசனா கட்சி அளித்த வாக்குறுதியின்படி எந்தவிதமான பணமும் அறக்கட்டளைக்கு வரவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான அனில் தேசாய் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராமர் கோயில் கட்டுமானத்தின்போது ரூ.1 கோடி நிதி அளிக்கப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, கடந்த மாதம் 27-ம் தேதி உத்தவ் தாக்கரேயின் 60-வது பிறந்த நாளின்போது அந்த ஒரு கோடி ரூபாய், ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்பட்டுவிட்டது என்பதற்கான ஒப்புதல் சீட்டும் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. ராமர் கோயிலுக்கு அளித்த வாக்குறுதியை சிவசேனா கட்சி நிறைவேற்றிவிட்ட நிலையில், எங்கள் கட்சி சார்பில் எந்தப் பணமும் அறக்கட்டளைக்கு வரவி்ல்லை என்று நிர்த்தயா கோபால் தாஸ் மகராஜ் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. இவ்வாறு அனில் தேசாய் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>