தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல!: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை..!!

சென்னை: தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்திருக்கிறது. துப்பாக்கி கலாச்சாரம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துன்பமில்லாத நாட்டுத் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் மற்றும் கொள்ளையடித்த விவகாரத்தில் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருவதாகவும், இவை நாட்டுக்கும் தமிழகத்திற்கும் நல்லது கிடையாது எனவும், இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம் இந்த வழக்கில் தமிழக டி.ஜி.பி-யையும், சென்னை மாநகர காவல்துறை ஆணையரையும் எதிர்மனுதாரராக சேர்த்ததுடன், நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதாவது, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளையடித்ததாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது? வடமாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எளிதாக கிடைக்கிறது என்ற தகவலில் உண்மை இருக்கிறதா? சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழகத்தில் இதுவரை எத்தனை பேருக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது? உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக இதுவரை எத்தனை நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது உள்ளிட்ட விவரங்களை கேட்டு, அது தொடர்பாக  2 வாரங்களில் தமிழக அரசும், டி.ஜி.பி.யும், சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories:

>