மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை!: தமிழக அரசின் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு..!!

சென்னை: மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்றிருக்கின்றனர். அதேவேளையில், புதிய கல்விக் கொள்கை, கல்வி சார்ந்த அனைத்து உரிமைகளும் மாநில அரசிடமிருந்து பறிக்கும் வகையில் இருப்பதால் அதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மும்மொழிக் கொள்கையை நிராகரித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்பை முதல்வர் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். இதுவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் கல்வி வணிகமயமாகும் என்றும் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கல்வி சார்ந்த அனைத்து உரிமைகளும் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்பதால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். தமிழ்நாட்டின் கல்வி ஒருமையை பாதுகாக்கக்கூடிய அளவிற்கு தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக நிராகரிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது. புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: