கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகத்தில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வேகமாக பரவும் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு களப்பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளும் தப்பவில்லை. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில்,  கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா  பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் ஆலோசனையின்படி, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் எடியூரப்பா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா  பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் எடியூரப்பா சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வீட்டு அலுவலகத்தில் ஒரு துப்பாக்கிதாரி, சமையல்காரர், பணிப்பெண், ஓட்டுநர், வீட்டுக்காப்பாளர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், ஆறு பேரும் கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: