×

நெற்பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை: விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராமசுப்ரமணியன் ஆகியோர் குறுவை நெல்பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்துள்ளனர். நெல்லில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை இயற்கை எருக்கலான பசுந்தாள் உரம், தொழு உரம், மண் புழு உரம் மற்றும் மக்கிய தென்னை நார்கழிவு, செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் முயூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களையும் உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லத்தையும், நுண்ணூட்ட சத்துக்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பது தான் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஆகும். கோடையில் சணப்பை, தக்கைப்பூண்டு பயிரிட்டு பின் மடங்கி உழுவதால் மண்ணில் கரிமப் பொருள்களின் அளவு அதிகரிப்பதுடன் பயிருக்கு வேண்டிய தழைச்சத்து கிடைக்கின்றது.

நெல்பயிருக்கு அடியுரமிட உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தொழு உரம் ஏக்கருக்கு 5 டன் மக்கிய குப்பை அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2 டன் இடுவதால் மண்ணின் அங்கக தன்மை நிலை நிறுத்தப்பட்டு அதிக விளைச்சலைப் பெறலாம். வயலில் ரசாயன உரங்களை மண் ஆய்வு அடிப்படையில் இடவேண்டும். இதனால் தேவைக்கு குறைவான அல்லது அதிக மண் உரமிடுவதை தவிர்க்க முடிகிறது. வயல் மண் ஆய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்ற உரஅளவை இடவேண்டும். குறுவை நெல் ரகங்களுக்கு ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்தும், 20 கிலோ மணிச்சத்தும், 20 கிலோ சாம்பல் சத்தும், காவிரி டெல்டா பகுதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.  இதனால் நெற்பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.


Tags : Paddy, Integrated Fertilizer Management, Farmers, Agricultural Scientists
× RELATED ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில்...