×

தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு நாளைக்கு 550 ஒதுக்கீடு: கொரோனா நோயாளி உணவிற்கான நிதியில் முறைகேடு?

நாகர்கோவில்:  தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு உணவிற்கான நிதியில் பல கோடி மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 24ம் தேதி மாலை முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது சற்று தளர்வில் உள்ளது. ஆரம்பத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் பரவ ஆரம்பித்த தொற்று சில உயிர்களை காவு வாங்கியதுடன், சென்னையில் சில பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு இபாஸ் வாங்கியும்,  வாங்காமல் குறுக்கு வழியில் வந்தவர்களால் தமிழகம் முழுவதும் தொற்று சமுதாய பரவல் போல் பரவி வருகிறது.

அதிலும் தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரயில்கள் விடப்பட்டதும் முக்கிய காரணமாக உள்ளது. குமரியில் ரயில்களில் வந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் தான் பாதிப்பு அதிகம் தெரியவந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் தொற்றாளர்கள் தற்போது பரிசோதனையில் கண்டறியப்பட்டதும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனிமைப்படுத்தும் வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் இருகட்ட சளி பரிசோதனையில் நெகடிவ் அறிக்கை வந்த பின்னர் வீட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்படுகின்றனர். ‘கொரோனா தொற்று ஆரம்ப காலத்தில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சத்தான உணவுகள், பிரியாணி வழங்கியதுடன், வீடு திரும்பும் போது பழக்கூடை தந்து மரியாதை செலுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் வசித்த பகுதி முற்றாக தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது பரவலாக உள்ளதால், ஏரியா தனிமைப்படுத்தல் கைவிடப்பட்டு விட்டது. பாதிப்பட்ட வீட்டில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். இதற்கிடையே அரசு மருத்துவமனைகள் நிரம்பியதால், கோவிட்  கேர் சென்டர்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இவ்வாறு அனுமதிக்கப்படுவோருக்கு சாப்பாடு அளிக்க முடியாமல் சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் தடுதாறி வருகின்றன. குமரியில் தனிமைப்படுத்தப்பட்ட பலர் காலையில் அனுமதிக்கப்பட்டாலும், இரவில் தான் உணவு கிடைத்தது. அரசு மருத்துவமனைகளில் வழக்கமாக வழங்கப்படும் உணவே வழங்கப்பட்டது.

இதனால் உணவு பற்றாமல் பலரும் தங்களை வீட்டிற்கு அனுப்ப கோரி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதுமே கொரோனா உணவு நிதி ஒதுக்கீட்டில் கோடி கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசு தனிமைப்படுத்தல் மையங்களில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.550 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வழங்கப்படும் உணவின் தரம் அதிக பட்சம் ரூ.100 முதல் ரூ.150க்குள் தான் இருக்கும். அப்படியானால், மீதம் உள்ள பணம் எங்கே? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஆரம்ப காலகட்டத்தில் தன்னார்வலர்கள் உதவியுடன், தனியார் உணவு மையங்களில் இருந்து தரமான உணவு வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 1,92,964 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் சில ஆயிரம் பேரை கழித்தாலும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகளில் தான் தனிமைப்படுதப் பட்டிருந்தனர். ஆரம்பத்தில் 20 நாட்களுக்கு மேல் இருந்தனர். தற்போது 7 முதல் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 7 நாட்கள் மட்டும் என்றாலே 1.80 லட்சம் பேருக்கு ரூ.550 வீதம் 69.3 கோடி உணவிற்காக ெசலவிடப்பட்டுள்ளது.

இதில் உணவின் தரம் ரூ.150 இருக்கலாம் என்றாலும், ரூ.250 வீதம் கணக்கிட்டால், 31.50 கோடிதான் ஆகியிருக்கும். (இது 7 நாட்களுக்கு மட்டுமான உத்தேச கணக்குதான். நிஜம் இன்னமும் அதிகமாக இருக்கும்) மீதம் உள்ள 37.8 கோடி எங்கே என்ற ேகள்வி எழுந்துள்ளது. எனவே மாவட்ட வாரியாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளின் எடை அளவு, பால் அளவு, முட்டைகள் எண்ணிக்கை அதற்கான வழங்கப்பட்ட தொகை  தனியார் அமைப்பு மூலம் என்றால், அந்த அமைப்புகளிடம் மொத்தம் வாங்கப்பட்ட உணவு பொட்டலங்கள் எண்ணிக்கை, அதற்கு செலுத்திய தொகை போன்றவற்றை வெளிப்படையாக அறிவிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவர்கள் ஒதுக்கீட்டிலும் கை வைப்பா?
கொரோனா கவனிப்பு மையங்களில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் என 7 நாட்களுக்கு 4 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். பணி நேரத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வேண்டும்.  7 நாட்கள் பணி முடிந்த பின்னர் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.  இவர்களுக்கு உயர்தர சைவ மற்றும் அசைவ உணவங்களில் இருந்து உணவு விநியோகிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் பிரபல உணவகங்களில் பேரம் பேசி குறைந்த தொகைக்கே விநியோகிக்கின்றனர்.

இதுபோல்தான் மிகவும்  சொற்ப வாடகையே  அந்தந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளால் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலருக்கும் இந்த வாடகையும் தராமல் இழுத்தடிக்கின்றனர். இத்தனைக்கும் ஒரு மருத்துவருக்கு ஒரு நாள் உணவு மற்றும் தங்கும் விடுதி செலவாக ரூ.2,500 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் நர்சுகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு சாப்பாடு மற்றும் தங்கும் இட வாடகையாக தினசரி ரூ1,500 ஒதுக்கப்பட்டுள்ளது.

தூய்மைபணி பாரபட்சம்:
மருத்துவர்கள் போன்றே தூய்மை பணியாளர்களும் கொரோனா வார்டு மற்றும் ேகர் சென்டர்களில் பணியாற்ற ஒதுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு 15 நாட்கள் பணி, 15 நாட்கள் தனிமைப்படுத்தல் என இருக்க வேண்டும். ஆனால் பல உள்ளாட்சிகளில் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல், குடும்பத்தினரை காண முடியாமல் மனஉளைச்சலில் உள்ளனர்.

போனஸ்:
அரசு நிர்ணயம் படி உணவகங்களுக்கு கட்டணம் வழங்கப்படவில்லை என்பதுடன், தனியாக லோக்கல் பிரமுகர்களும், ஒரு நாளைக்கு 500 உணவு பொட்டலம் என்றால், விலையை பொறுத்து ஒரு பொட்டலத்திற்கு ரூ.10 ரூ.20 வரை கமிஷன் போனசாக வாங்குகின்றனர்.


Tags : patient misappropriation ,Corona , Corona patient, diet, abuse
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...